இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழர் கட்சி முன்னணி

Written by vinni   // September 22, 2013   //

TNAஇலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது.

தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது. இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.

வடக்கு மாகாண கவுன்சிலில் மொத்தம் 36 உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

பெரும்பாலான வாக்காளர்கள் நெற்றியில் விபூதி–குங்குமம் வைத்து ஓட்டுப்போட காத்து நின்றதை பார்க்க முடிந்தது. ‘‘தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சொந்த மண்ணை எங்களிடமே திருப்பித்தர வேண்டும். இங்கு நாங்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை வேண்டும்’’ நல்லூர் வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்திருந்த 4 குழந்தைகளின் தாயாரான கோபால சுதந்திரன் புஷ்பவல்லி நிருபர்களிடம் கூறினார்.

காலையில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. காலை 10 மணிக்குள் யாழ்ப்பாணத்தில் 35 சதவீத ஓட்டுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 29 சதவீதமும், மன்னார் மாவட்டத்தில் 30 சதவீதமும், வவுனியாவில் 24 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. மாலை 4 மணி வரை தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

முடிவில் மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு சதவீத நிலவரம் வருமாறு–

முல்லைத்தீவில் 70 சதவீதம், முல்லைத்தீவு – 70, யாழ்ப்பாணம் –60, கிளிநொச்சி – 68, மன்னார் –70, வவுனியா –65, சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மத்திய மாகாணத் தேர்தலில், கண்டியில் 58 சதவீதம், மாத்தளையில் 54 சதவீதம், நுவரேலியாவில் 54.5 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

வடமேற்கு மாகாணத்தில் புத்தளத்தில் 60 சதவீதமும், குருநாகலில் 55 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தன. வடக்கு மாகாணத்தில் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், ஓட்டு பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

பின்னர் உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு 10 மணி அளவில் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி அதிக ஓட்டுகள் பெற்று இருந்தது. அதன்பின் ஓட்டு பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்பட்டன.

இதிலும் எதிர்பார்த்தபடி, தமிழர் கட்சி வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டுகள் பெற்று முன்னணி வகித்தனர். இன்று மத்தியானத்துக்கு முன்பாக ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தேர்தலின்போது பல இடங்களில் ராணுவத்தினர் அத்துமீறி செயல்பட்டு, தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டாம் என்று வாக்காளர்களை மிரட்டியதாகவும் புகார்கள் வந்தன. தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளர் விக்னேஸ்வரனின் சகோதரி வீட்டிற்கும் இன்று ராணுவத்தினர் சென்று இருந்ததாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறப்பட்டது.

ஏற்கனவே தமிழர் கூட்டணி வேட்பாளர் ஆனந்தி சசிதரன் வீட்டை ராணுவத்தினர் தாக்கியதுடன், அவருடைய ஆதரவாளர்கள் 9 பேரையும் தாக்கி காயப்படுத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ராணுவத்தினர் சென்று தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று மிரட்டியதாக, தமிழ் தேசிய கூட்டணியின் துணைத்தலைவர் எஸ்.செந்திராஜன் கூறினார்.

வாக்குச்சாவடிகளுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியது இருந்ததாக, தேர்தல் பார்வையாளர் குழு ஒன்று கருத்து தெரிவித்து இருந்தது. ராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக பல இடங்களில் வாக்காளர்கள் மத்தியில் பீதி நிலவியதாகவும் வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணிக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையேதான் முக்கிய போட்டி நிலவியது.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக ராணுவத்தினரும் அரசு எந்திரமும் செயல்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டணி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. ஆளும் கூட்டணி சார்பில் பிரசாரம் மேற்கொண்ட அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தனித்தமிழ் ஈழ பிரிவினை கோரிக்கையை மீண்டும் தட்டி எழுப்ப முயல்வதாக, தமிழ் தேசிய கூட்டணி மீது குற்றம் சாட்டி வந்தார்.

மாகாண கவுன்சிலர்களுக்கு தற்போது உள்ள அதிகாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், தமிழர் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர், விக்னேஸ்வரன். தமிழர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால், இவர்தான் வடக்கு மாகாண கவுன்சிலின் முதல்–அமைச்சராக தேர்ந்து எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று விக்னேஸ்வரன் புகழ்ந்ததும், இலங்கை அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கொழும்பை சேர்ந்த விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதல்–அமைச்சர் வேட்பாளராக தேர்ந்து எடுக்கப்பட்டது குறித்தும் ராஜபக்சே அதிருப்தி தெரிவித்து இருந்தார்.


Similar posts

Comments are closed.