தேர்தல்கள் நியாயமாக நடக்கவில்லை’: கஃபே குற்றச்சாட்டு

Written by vinni   // September 21, 2013   //

Sri-Lanka-Electionஇலங்கையில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடந்துமுடிந்துள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்று கஃபே என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் இராணுவத்தினரும் இனந்தெரியாத குழுவினரும் மக்களை அச்சுறுத்தியுள்ளதுடன் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட இவ்வாறான 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கஃபே அமைப்பின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பகுதியில் இரண்டு வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் கண்டியிலும் தோட்டப்புற ங்களில் இன்றும் சட்டவிரோத பிரச்சாரங்கள் நடந்துள்ளன.

கம்பளை, பன்வில பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன.

வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பகுதியில் இன்று அதிகாலை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் நான்கு வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை மாகாணசபைத் தேர்தலில் மொத்தமாக 576 தேர்தல் விதிமீறல்கள் நடந்துள்ளன.

தேர்தல் காலத்தைப் போலவே வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கஃபே நிறுவனம் தேர்தல் ஆணையாளரிடம் அனுமதி கோரியிருந்தது.

ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காதமை தேர்தல் முறையின் வெளிப்படைத் தன்மையையே கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் ஒட்டுமொத்தத்தில் இந்த மாகாணசபைத் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் அமையவில்லை என்றும் கஃபே அமைப்பு தனது கண்காணிப்பை வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.