பாதுகாப்பு செலவீனத்தை அதிகரிப்பதான கனடாவின் அறிவிப்புக்கு அமெரிக்காவின் அதிபர் டொனாலட்ட டிரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பிரதமரிடம் தனது பாராட்டினை தெரிவித்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கனேடிய மத்திய அரசாங்கம் கனடாவின் பாதுகாப்பு கொள்கை மீளாய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளதுடன், அந்த அறிக்கையில் இராணுவத்துக்கான செலவீனத்தினை எதிர்வரும் பத்து ஆண்டுகளில் 32.7 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கவுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கான பாதீட்டினை 70 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேட்டோ அமைப்புக்காக தமது தரப்பு நிதிப் பங்களிப்பினை உரிய முறையில் செலுத்தாத உறுப்பு நாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுவரும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவ்வாறான நாடுகள் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தினை பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும் எனவும், இராணுவத்துக்கான ஒதுக்கீட்டினை வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.

இவ்வாறான நிலையிலேயே கனடா தனது பாதுகாப்பு செலவீனத்தினை அதிகரிப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பாராட்டு வெளியிட்டுள்ள அவர், உலக அளவில் கனடாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றே தாம் கருதுவதாகவும், எனவே எமது இராணுவத்துக்கான செலவீனங்கள் தொடர்பில் நாம் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவத்தினால் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், கனடா உலக அளவில் தனது நிலையினை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏனைய கனேடிய அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.