உலக அளவில் அதிக அளவு பணக்கார குடும்பங்கள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2016 ஆண்டுக்கான அந்த பட்டியலில் கனடா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

போஸ்டன் ஆலோசனை ஆய்வுக் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் 3,85,000 செல்வந்தக் குடும்பங்கள் 2015ஆம் ஆண்டில் வாழ்ந்து வந்ததாக கணிப்பிடப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 4,85,000 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,85,000 குடும்பங்கள் என்ற இந்த எண்ணிக்கையானது, கனடாவின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் 3.5 சதவீதம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறு 2016ஆம் ஆண்டு கனடாவில் பணக்காரக் குடும்பங்களாக உள்ள அந்த 3.5 சதவீதமான குடும்பங்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் செல்வத்தின் 32.5 பங்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலை தொடருமானால் எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் கனடாவில் இருக்கும் பணக்காரக் குடும்பங்களின் எண்ணிக்கை 7,85,000 ஆக இருக்கும் எனவும், அது நாட்டின் ஒட்டுமொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் 5.5 சதவீதமாக இருக்கும் என்பதுடன், நாட்டு மக்களின் செல்வத்தில் 38 சதவீதம் இந்த செல்வந்த குடும்பங்களின் வசம் இருக்கும் எனவும் அது எதிர்வுகூறியுள்ளது.

இதுவேளை குறித்த இந்த செல்வந்த குடும்பங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 2015ஆம் ஆண்டு போன்று 2016ஆம் ஆண்டிலும் முதலாவது இடத்தினை அமெரிக்காவே பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.