உலகளாவிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாதத்தினை முறியடிப்பது தொடர்பில கனடா ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு பதற்றமான நிலைமை காணப்படும் நிலையில், கடந்த வியாழக்கிமை ஒட்டாவாவில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது.

உக்ரெய்னில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அடுத்து, ரஷ்ய அரசுடனான பெரும்பாலான உறவுகளை கனடா துண்டித்துள்ள நிலையில், பல ஆண்டுகளின் பின்னர் கனடா ரஷ்யாவுடன் நடாத்தியுள்ள முதல் சந்திப்பு இது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நட்டாஷா நிஸ்ட்ரோம், இரண்டு நாடுகளினதும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்த மூத்த அதிகாரிகள் தத்தமது கண்ணோட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கலந்துரையாடலாக இந்த சந்திப்பு அமைந்ததாக விபரித்துள்ளார்.

எனினும் அவர் குறித்த இந்த கலந்துரையாடலினை முக்கியத்துவப்படுதும் வகையிலான கருத்தெதனையும் முன்வைக்காத நிலையில், அனைத்துலக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் கனடாவானது, ரஷ்யா உட்பட ஏனைய அரசாங்கங்களுடனும் கருத்துப் பரிமாற்றங்களை கிரமமான முறையில் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான இந்த சந்திப்பு கனடாவின் தேசிய நலனை அடிப்படையாக கொண்டே இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சந்திப்பின் போது ஆட்டிக் விவகாரம், பயங்கரவாத தடுப்பு விவகாரம் மற்றும ஏனைய அனைத்துலக பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் கனேடிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நட்டாஷா நிஸ்ட்ரோம் கூறியுள்ளார்.