கனேடிய அரச கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

கடற்படையின் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று, பிரிட்டிஷ் கொலம்பிய துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே, அவ்வழியே சென்ற பிறிதோரு கடற்படைப் பயிற்சிக் கப்பல் அதனுடன் மோதியதாக கூறப்படுகிறது.

குறித்த அந்த பயிற்சிக் கப்பல் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வேளையிலேயே, நீர்மூழ்கிக் கப்பலுடன் மோதியதாகவும், அதனால் இரண்டு கப்பல்களுக்கும் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவும் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த விபத்தின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய நீர்மூழ்கிக் கப்பல் 70 மீட்டர் நீளமானது என்பதுடன், 2,400 தொன்னுக்கும் அதிகமான எடை உடையது எனவும், அதனுடன் மோதுண்ட பயிற்சிக் கப்பல் சுமார் 33 மீட்டர் நீளமும், 210 தொன் எடையும் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பில் கனேடிய தேசிய பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.