நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி, ஒரு நாள் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தி நாடு முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்வதற்கு ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. காலி முகத்திடலில் நடத்திய மே தினக்கூட்டத்துக்குச் சமுகமளித்திருந்த சனத்திரளைப் பார்த்த பின்னரே, ஒன்றிணைந்த எதிரணி மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால், தங்களுக்கு எதிராக எவ்வாறான தீர்மானத்தை எடுத்தாலும், அதற்கு முகம்கொடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளதாகவும் அறிமுடிகிறது. மே தினத்தன்று தம்முடைய பலத்தை நிரூபிப்பதற்கே, ஒன்றிணைந்த எதிரணி, காலி முகத்திடலைக் கோரியிருந்தது. அதன்பிரகாரம், மக்கள் பலம் நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், தனக்கு எதிராகவும் தன்னுடைய குழுவுக்கு எதிராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாயின், அதற்கும் முகம்கொடுப்பதற்கு தான் தயாரென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மே தினத்தன்று, கொழும்பு – தாஜ் சமுத்திரா ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து காலிமுகத்திடலை அவதானித்து கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பெரும் சந்தோஷமடைந்திருந்தார் என்றும் இரண்டு வருடங்களின் பின்னர், அவர் அன்று பெரும் சந்தோஷத்தில் இருந்தார் என்றும் அவருக்கு அண்மையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில், பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது, “மே தினப் பேரணியின் ஊடாக, ஒன்றிணைந்த எதிரணியின் மீதே, அதிகளவிலான மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர் என்பது புலனாகிறது. எங்களுடைய மே தினம், வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய மே தினமாகும். அதேபோல, தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது, மக்கள் சக்திக்கு எதிரான அரசாங்கமாகும் என்பது மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், நாடாளுமன்றத் தேர்தலை கோரி, நாடளாவிய ரீதியில் ஒருநாள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், நாளுக்கு நாள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கும் தங்களுடைய போராட்டத்தை வேகப்படுத்துவதற்கும், நாடாளுமன்றத் தேர்தலைக் குறி வைப்பதே உசித்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தாங்கள் இன்னும் ஆட்சியில் இருப்பதற்கு தகுதியானவர்கள் என்பதை, நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய நிரூபிக்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்தார்.