பெலீஸ்(Belize) நாட்டில் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த ரொரன்ரோவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரொரன்ரோவைச் சேர்ந்த 52 வயதான குறித்த அந்த பெண்ணும், அவரது காதலரான அமெரிக்காவைச் சேர்நத 36 வயது ஆணும், மத்திய அமெரிக்க நாடான பெலீஸில் காணாமல் போயிருந்தனர்.

அதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக அவர்களைத் தேடி வந்த அந்த நாட்டுக் காவல்த்துறையினர், அங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றினுள் இருவரினதும் சடலங்களை நேற்றுக் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த அந்த இருவரும் கடந்த செவ்வாய்கிழமை இரவு இறுதியாக காணப்பட்ட இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கைவிடப்பட்டிருந்த அந்த பெண்ணின் SUV ரக வாகனத்தினை நேற்று பிற்பகல் அளவில் காவல்த்துறையினர் கண்டு பிடித்ததைத் தொடர்ந்தே காணாமற் போனவர்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவர்களின் மரணத்துக்கான உண்மைக் காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெலீஸ் நாட்டில் வன்முகைளின் வீதம் அதிகம் என்பதனால் பயணிகளை அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுலாத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ரொரன்ரோவைச் சேர்ந்த அந்த பெண் பெலீஸ் நாட்டில் வசித்துவந்த பிராந்தியம் பாதுகாப்பானதாகவே இருந்ததாக உயிரிழந்தவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.