கொழும்பு காலிமுகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது, இவர்கள் மகிந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்டுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர்களே இவ்வாறு உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

குமார வெல்கம, சமல் ராஜபக்ச, மகிந்தானந்த அளுத்கமகே, சீ.பீ. ரத்நாயக்க, ரஞ்சித் சொய்சா ஆகியோர் அடுத்த வாரத்திற்குள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி, பாத்ததும்பர தொகுதி ஆகியவற்றின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஜனக்க பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்தே ஆகியோர் கடந்த வாரம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.