சமூகத்தில் வறுமையினை குறைப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படும் திட்டம் ஒன்றை கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசாங்கம் பரீட்சித்துப்பார்க்க உள்ளது.

இதற்காக அது மேற்கொண்டுள்ள இந்தப் பரீட்சாத்த திட்டமானது, குறைந்த வருமானம் பெறுவோர் தமக்கான அடிப்படைத் தேவைகளுக்கு போதுமான வருமனத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வருமானம் அற்றோருக்காக தற்போதும் சமூக நலத் திட்டங்கள் நடப்பில் உள்ள நிலையில், அவற்றை விடவும் அடிப்படை வருமானத்தினை உறுதிப்படுத்தும் இந்த புதிய திட்டம் பலன்மிக்கதாக அமைந்துள்ளதா என்பதனைக் கண்டறிவது இந்த பரீட்சார்த்த திட்டத்தின் நோக்கம்.

தேர்ததெடுக்கப்பட்ட இடங்களில் தேந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குறித்த திட்ட உதவிகளை சுமார் 3 ஆண்டுகள் வழங்கி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு, அது எதிர்பார்த்த பலனை அளிக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒன்ராறியோவின் Hamilton, Lindsay, Thunder Bay ஆகிய மூன்று இடங்களிலும் ஒரு ஆண்டுக்கும் அதிக காலம் வசிக்கும் 18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் 4,000 பேர் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அவ்வாறு எழுந்தமானமாக தேர்வு செய்யப்படும் பயனாளர்களில் தனி நபருக்கு ஆண்டுக்கு 16,989 டொலர்களும், தம்பதிகளாயின் 24,027 டொலர்களும், அவர்களது தொழிலில் இருந்து கிடைக்கும் தொகையில் 50சதவீதம் நீங்கலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த திட்டத்திற்காக ஒன்ராறியோ அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், சமூகத்தின் மிக முக்கிய பிரச்சினையான இதனை எவ்வாறு தீர்ப்பது என்பதனை முடிவெடுக்கும் வகையில், இவ்வாறான திட்டங்களை துணிச்சலுடன் பரீட்சித்துப் பார்க்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று குறித்த இந்த திட்டம் அறிமுகப்படத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ள அவர், இந்த திட்டம் தொடர்பில் தயக்கம் காட்டி பின்வாங்குவதற்கோ, இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளுக்காக காத்திருப்பதற்கோ இது நேரம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு திட்டத்தினை ஒன்ராறியோ மட்டுமின்றி, கடந்த சனவரி மாதத்தில் இருந்து பின்லாந்து நாடும் பரீட்சித்து வருவதுடன், ஸ்கொட்லாந்து அரசாங்கமும் இது தொடர்பில் ஆர்வம் வெளியிட்டு்ளளமை குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் வறுமையினை குறைப்பதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த திட்டம் தொடர்பில் கனடாவில் லிபரல் மற்றும் பழமைவாதக் கட்சி ஆகிய இரண்டு தரப்புகளுமே ஆர்வம் காட்டியுள்ளன.