ரொரன்ரோ பெரும்பாகத்தில் வீட்டு விலைகள் அதிரிப்பதை தணிக்கும் வகையிலான ஒன்ராறியோ அரசாங்கத்தின் செயற்திட்டம் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அந்த செயற்திட்டத்தில் ரொரன்ரோவில் வீடு வாங்கும் நிரந்தரக் குடியுரிமை அல்லாத வெளிநாட்டவர்களுக்கு 15சதவீத வரி விதிக்கும் திட்டமும் உள்ளடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக முதல்வர் கத்தலின் வின்னும், மாநில நிதி அமைச்சர் சார்ளஸ் சூசாவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, இந்த செயற்திட்டத்தில் சந்தை நிலவர எதிர்வுகூறுநர்கள் விவகாரம், வீடுகளின் நிரம்பலை துரிதப்படுத்தல், கட்டுப்படியான வாடகை ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ரொரன்ரோ பெரும்பாகத்தில் வீடுகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் தீவிரத் தன்மையானது ஒன்ராறியோ மாநில அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ, மாநில நிதி அமைச்சர் சார்ளஸ் சூசா மற்றும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி ஆகியோர் கலந்துரையாடலை நடாத்தியுள்ளனர்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட ஒன்ராறியோ நிதி அமைச்சர் சார்ளஸ் சூசா, வீடுகளை வாங்கி விற்பதானது ஒரு பிழையான செயற்பாடு இல்லை என்ற போதிலும், அவற்றில் ஈடுபடுபவர்களும் அதனால் ஏற்படும் செலவீனங்களில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், காணி கட்டிட சந்தை நிலவரம் தொடர்பில் எதிர்வுகூறல்களை வெளியிடுவோர், இந்த விலை அதிகரிப்பில் கணிசமான பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாம் புதிய வீடுகளின் எண்ணிக்கையினை அதிகரித்து நிரம்பலை வேகப்படுத்தும் நடவடிக்கையையும் முன்னெடுத்து வருவதாகவும், வீடுகளை பயன்படுத்தாது வைத்திருப்போர் மீதான வரிவிதிப்பு குறித்த ரொரன்ரோ நகரபிதாவின் திட்டத்தினையும் பரிசீலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒன்ராறியோ அரசாங்கம் இன்று இது தொடர்பான செயற்திட்டம் ஒன்றை வெளியிடவுள்ளமை தொடர்பில் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றன.