ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக நீண்டகாலம் பதவி வகித்துவந்த றொன் மொயீசர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த நிலையில் நேற்று காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான அவர் நேற்று உயிழந்து விட்டதை உறுதிப்படுத்தி ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்காபரோ தொகுதிக்கான நகரசபை உறுப்பினராக இருந்துவந்த அவர், கடந்த மார்ச் மாத்தில் தாம் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றொன் மொயீசர் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்து வந்ததுடன், அந்த காலப்பகுதியில் ரொரன்ரொ போக்குவரத்து சபையின் ஆணையாளர், ஸ்காபரோ சமூக மன்றின் தலைவர் என பல்வேறு பதவிகளையும் வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் மறைவை ஒட்டி ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், றொன் மொயீசர் நகர மன்றில் தேவைகளுக்காக குரல் கொடுப்பவர் என்றும், அமைதியான நபர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காபரோ மக்களின் நலன்களுக்காக மிகுந்த அர்பணிப்புடன் செயலாற்றிய அவர், ஸ்காபரோ மக்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த ரொரன்ரோவின் தேவைகளுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பிரதிபலிப்பவராகவும் இருந்தார் என்றும் விபரித்துள்ளார்.