10 வயது சிறுவன் ஒருவருக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்தமைக்காக எட்வேட் ஐலட்டைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிடம் ஏயர் கனடா நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த குடும்பத்தினர் தமது விடுமுறை பயணத்திற்காக சார்லட்டவுனிலிருந்து கோஸ்டா றிக்காவிற்கு செல்வதற்கு நான்குபேருக்கு கடந்த ஓகஸ்ட் மாதமே அனுமதிச் சீட்டுக்களை பதிவு செய்திருந்தனர்.

பின்னர் மார்ச் மாத விடுமுறைக்கான அந்தப் பயணத்தை மேற்கொண்ட போது, விமானத்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் இந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவனுக்கு விமானத்தில் இடமில்லை என்று விமான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மகனை விமானத்தில் ஏற்ற மறுத்ததால் குடும்பத்தின் ஏனைய மூவரும் தங்கள் பயணத் திட்டத்தினை பல வழிகளில் மாற்றியமைக்க நேர்ந்ததாக சிறுவனின் தந்தை டோய்ல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அது குறித்த செய்தி கனடிய செய்தித்தாள் ஒன்றில் வெளியான பின்னர் தான், எயர் கனடா நிறுவனம் பாதிக்க்பபட்ட குறித்த குடும்பத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், நட்ட ஈடு வழங்குவதற்கும் முன்வந்ததாக அந்த 10 வயதுச் சிறுவனின் தந்தை டோய்ல் விபரம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதாக எயர் கனடா பேச்சாளர் கூறியுள்ளார்.

அண்மையில் யுனைட்டட் விமானத்திலிருந்து பயணி ஒருவர் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு விமானத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்ட சம்பவம் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.