ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த எழுத்துமூல அறிக்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதன்போது விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

அதன்பின்னர் பதிலளிக்க உரிமை உள்ள நாடு என்ற வகையில் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஹுசைனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுவார். தொடர்ந்து மனித உரிமை உறுப்புநாடுகளும் உறுப்புரிமை அற்றநாடுகளும் இலங்கை தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளியிடவுள்ளன.

அதேவேளை புதன்கிழமை இலங்கை தொடர்பான உரையை நிகழ்த்தவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் விரைவான முன்னேற்றத்தை வெளிக்காட்டவேண்டுமென வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏற்கனவே இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் கவலைக்குரிய விதத்தில் தாமதமாக செயற்படுவதாகவும் விரைவான முன்னேற்றத்தை வெளிக்காட்டவேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்புநீதிமன்ற பொறிமுறையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டமூலங்களை நிறைவேற்றவேண்டுமெனவும் ஹுசைன் குறிப்பிட்டிருந்தார்.