ரொரன்ரோ நகரபிதா தலைமையிலான குழுவினர் இலங்கையின் வடக்கில் இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்கால் பகுதி மண்ணில் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வர்த்தக நோக்கங்களின் அடிப்படையில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கான தமது 10 நாள் வர்த்தக பயணத்தை ரொரன்ரோ நகரபிதா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 15ஆம் நாள் ஆரம்பித்திருந்த இந்த வர்த்தகப் பயணத்தின் முதல் கட்டமாக இந்தியா சென்றிருந்த அவர்கள், அங்கு புது டெல்லி, ஹைதரபாத், மும்பாய் ஆகிய நகரங்களுக்கு சென்று பல்வேறு சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தலைமையிலான குழுவினர், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்ததுடன், தமது அந்த சந்திப்பின் போது முள்ளிவாய்க்காலுக்கு சென்று போரில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற தமது விருப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனுடன் இணைந்து அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரொரன்ரோ நகரபிதா உள்ளிட்ட குழுவினருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தானும் முள்ளிவாய்க்காலுக்கு சென்றதுடன், முள்ளிவாய்கால் நினைவேந்தல் பகுதியில் அனைவருமான மலர்வளையம் வைத்து, சுடரேற்றி அஞ்சலி செலு்தியுள்ளனர்.

இதனை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்திற்கும் சென்ற ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்கள் தமக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்தும், இன்னமும் தமக்கு மறுக்கப்படும் நீதி குறித்தும் வெளியிட்ட கருத்துக்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது ரொரன்ரோ நகரசபை உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதன் சாண் உள்ளிட்ட ரொரன்ரோ பேராளர்களும் கலந்து கொண்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.