ஈஸ்ட் யோர்க் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு ஒன்பது மணியளவில் விக்ரோறியாப் பார்க் அவனியூ மற்றும் Dawes வீதிப் பகுதிக்கு தெற்கே, Meighen Avenueவில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் கிடைத்து காவல்த்துறையினர் அந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் மோசமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அந்த இளைஞன் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் பின்னர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் காவல்த்துறைப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதனையும் இதுவரை அவர்கள் வெளியிடவில்லை.