எனது மொத்த சொத்து விபரத்தை அறிய வேண்டுமாயின் தேர்தல் ஆணையாளர் நாயகத்தை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமையை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளது, எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை என குறிப்பிட்டார்.

தனது சொத்து விபரங்களை தேர்தல் ஆணையகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், அதை அறிய வேண்டுமாயின் தேர்தல் ஆணையாளர் நாயகத்தை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தமது பணிகளை வெளிப்படையாக செய்தால், எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்று 2 வருடத்திற்குள் சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் பழகிக்கொண்டுள்ள தவறான கலாச்சாரத்தில் இருந்து விலக வேண்டும்.

மிகவும் வெளிப்படையாக தமது பணிகளை நாட்டுக்காக செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் வழங்கிய சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

இப்படியொரு சுதந்திரம் ஏன் வழங்கப்பட்டது என்பதனை நாட்டு மக்கள் தெரிந்து செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நிகழ்வுக்கு ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.