இந்து சமுத்திரத்தில் அமைதி மற்றும் சுதந்திரமான கப்பல் பயணங்களை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் சகல தரப்பினரையும் அடக்கிய மாநாடு ஒன்றை கூட்டுவதற்கு இலங்கை தயாராக உள்ளது.

இதனை தலைமை ஏற்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் இராணுவ கப்பல்களுக்கு ஒழுக்க நெறி கோவை ஒன்றை உருவாக்குவதுடன், ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழி எனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழத்தின் சட்டப் பீடத்தின் விசேட அழைப்பாளர்களின் இராபோசனத்தில் சிறப்புரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் எழுந்து வரும் கடல் பயங்கரவாதம் தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் கடல் பயங்கரவாதத்திற்கு அப்பால் சென்றுள்ள கடல் பயங்கரவாதமானது தற்போது வர்த்தக கப்பல்களை கடத்திச் செல்லும் அளவுக்கு உயிர்பெற்று வருகிறது.

இந்த சகல விடயங்களையும் கவனத்தில் கொண்டு இந்து சமுத்திரத்தை அமைதியான பிராந்தியமாக மாற்ற முக்கியமான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் மற்றும் பிரதான கப்பல் நிறுவனங்கள் இணைந்து மாநாடு ஒன்றை நடத்தும் யோசனை தான் முன்வைப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.