வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், வடக்கையும், கிழக்கையும் இணைப்பது சாத்தியமாகாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “ கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் வட,கிழக்கு ஒன்றிணைக்கப்பட்டதாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உதயமானது.

இரண்டு மாகாணங்களையும் இணைப்பதற்கு முஸ்லிம் மக்கள் இன்றும் எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அவ்வாறு இருமாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெறும்பான்மையைப் பெற வேண்டும் என்று தெரிவித்த அவர், அந்தப் பெறும்பான்மையைக்கூட பெறமுடியாத அளவில்தான் நாடாளுமன்றத்திலும் நிலைப்பாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே வடக்கு, கிழக்கை இணைக்காமல் பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.