இலங்கையில் உள்ள பிரபல ஊடகம் ஒன்று நான் ஆட்சியில் இருக்கும் போது என்னிடம் இருந்து சகலவற்றையும் பெற்றுக்கொண்டு நான் ஆட்சியை விட்டு சென்றதும் மகிந்த ராஜபக்சவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை திருடி எனக் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவின் கணவரான விஜயகுமாரதுங்கவின் சிரார்த்த தின நிகழ்வு கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விஜயகுமாரதுங்க இன்று உயிருடன் இருந்திருந்தால், நாட்டின் நிலைமை முற்றாக மாறியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.

அதற்கு சந்திர்க்கா ஊடகவியலாளரிடம் “நீங்கள் எந்த ஊடகம்” என்று கேட்டார். பின்னர் ஊடகவியலாளர் தனது ஊடகத்தின் பெயரை குறிப்பிட்டார்.

அதன் பின்னர், “ஐயோ நான் உங்கள் ஊடகத்துடன் பேச மாட்டேன். நான் ஆட்சியில் இருக்கும் போது அனைத்தையும் என்னிடம் பெற்றுக்கொண்டனர். இந்த ஊடகம் இன்று இருப்பதற்கு நான் தான் காரணம்.

நான் பதவியில் இருந்து விலகிச் சென்ற பின்னர், மகிந்தவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு என்னை திருடி என்று அந்த ஊடகம் கூறியது” என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.